தமிழகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வித் துறைகளை உலகத் தரத்திற்கு உயர்த்தும் நோக்கில், அண்ணா பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி விரிவான செயல் திட்ட அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மற்றும் அறிவுசார் பொருளாதாரத்தின் வளர்ச்சியால் உலகளாவிய கல்விச் சூழல் வேகமாக மாறி வரும் நிலையில், கல்வித் தரம், ஆராய்ச்சித் திறன் மற்றும் மாணவர்களின் வேலைவாய்ப்பு திறனை உயர்த்த 2026 முதல் 2031 வரை ஐந்து ஆண்டுகளுக்கான பரிந்துரைகள் இதில் இடம் பெற்றுள்ளன.
பள்ளிக் கல்வியில், மாணவர்களின் அடிப்படை வாசிப்பு, எழுத்து மற்றும் கணிதத் திறன்களை மேம்படுத்த மாநில அளவிலான சிறப்பு இயக்கம் உருவாக்க வேண்டும் என அறிக்கை வலியுறுத்துகிறது. மேலும், கோடிங், டிஜிட்டல் கல்வி, நிதி அறிவு, காலநிலை கல்வி, தொழிற்கல்வி போன்ற எதிர்காலத் திறன்களை பாடத்திட்டத்தில் இணைக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதனை நடைமுறைப்படுத்த ஆசிரியர்களுக்கான தொடர்ச்சியான தொழில்முறைப் பயிற்சிக்காக “ஆசிரியர் சிறப்பு அகாடமிகள்” அமைத்தல், பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள், நவீன ஆய்வகங்கள், இணைய வசதிகள் உருவாக்குதல் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. மாணவர்களுக்கான மனநல ஆலோசனை மையங்கள் அமைப்பதும் பரிந்துரைகளில் இடம்பெற்றுள்ளது.
உயர்கல்வித் துறையில், துணைவேந்தர், பதிவாளர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகப் பதவிகளில் உள்ள காலியிடங்களை உடனடியாக நிரப்புதல், தொழில்துறை தேவைகளுக்கு ஏற்ப பாடத்திட்டங்களை மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்தல், ஆசிரியர் காலிப்பணியிடங்களை விரைவாக நிரப்புதல் ஆகியவை முக்கியமாக கூறப்பட்டுள்ளன. பல்கலை–தொழில் நிறுவன இணைப்பில் கட்டாய தொழிற்பயிற்சி முறை, ஏ.ஐ., ரோபோட்டிக்ஸ், சைபர் பாதுகாப்பு, பசுமை ஆற்றல் துறைகளில் சிறப்பு மையங்கள், ஸ்டார்ட்அப் மையங்கள், காப்புரிமை ஆதரவு மற்றும் ஆராய்ச்சி நிதி உதவிகள் ஆகியவற்றையும் அறிக்கை முன்வைக்கிறது. இத்திட்டங்களை கண்காணிக்க முதல்வர் தலைமையில் உயர் மட்ட “தமிழ்நாடு கல்வி மாற்றுக் குழு” அமைக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.





