வாஷிங்டன்: போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஈரானுக்கு அமெரிக்கா ரூ.3,000 கோடி வழங்கும் என்ற தகவலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மறுத்துள்ளார்.
107 நாட்களாக நீடித்து உலக எரிசக்தி சந்தைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்திய அமெரிக்கா–ஈரான் போர் தற்போது முடிவுக்கு வரும் சூழல் உருவாகியுள்ளது. ஜூன் 19-ஆம் தேதி அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும், இறுதி மற்றும் விரிவான ஒப்பந்தத்தை உருவாக்க அடுத்த 60 நாட்கள் இரு தரப்பும் பேச்சுவார்த்தையைத் தொடரும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
14 அம்சங்களைக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பாக பரவும் தகவல்களில், லெபனான் மீது ராணுவ நடவடிக்கைகளை கைவிடுவது, ஈரான் துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படை முற்றுகையை திரும்ப பெறுவது, ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஈரானின் மறுசீரமைப்புத் திட்டங்களுக்கு அமெரிக்க நிதி வழங்கப்படும் என்ற கூறுகைக்கு டிரம்ப் கடுமையாக மறுப்பு தெரிவித்தார். இது ஜனநாயகக் கட்சியினர் பரப்பும் பொய்யான செய்தி என்றும், ஈரான் ஒருபோதும் அணு ஆயுதம் வைத்திருக்காது என்று ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.





