உலகப் புகழ்பெற்ற திருப்பதி லட்டு பிரசாதத்தின் தரம் மற்றும் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்த, திருமலை திருப்பதி தேவஸ்தானம் (டிடிடி) மத்திய அரசின் இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வு குழுமம் (சிஎஸ்ஐஆர்) கீழ் இயங்கும் மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் (சிஎஃப்டிஆர்ஐ) உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. லட்டு தயாரிப்பில் பயன்படுத்தப்படும் நெய் கலப்படம் தொடர்பான புகார்களின் பின்னணியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2019–2024 காலகட்டத்தில் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட லட்டுகளில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் கவனம் பெற்றது. உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில், ஆந்திர அரசு சார்பில் தனிநபர் விசாரணை கமிஷனும் விசாரித்து வருகிறது.
சமீபத்தில் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இறுதி குற்றப் பத்திரிகையில், விலங்கு கொழுப்பு கலக்கப்படவில்லை என்றும், ஆனால் தரமற்ற நெய் பயன்படுத்தப்பட்டதாகவும் சிபிஐ குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, பாரம்பரிய சுவை மற்றும் புனிதத்தன்மை மாறாமல் தரக்கட்டுப்பாட்டை வலுப்படுத்தவே இந்த ஒப்பந்தம் என டிடிடி தெரிவித்துள்ளது.
ஒப்பந்தத்தின் கீழ், லட்டு தயாரிப்பு மற்றும் பேக்கேஜிங் முறைகளை நவீனப்படுத்துதல், ஆயுட்காலத்தை நீட்டிக்கும் தொழில்நுட்ப வழிகாட்டுதல், ஊழியர்களுக்கான பயிற்சி ஆகியவற்றை சிஎஃப்டிஆர்ஐ விஞ்ஞானிகள் வழங்குவர். மூலப்பொருட்கள் கொள்முதல் முதல் தயாரிப்பு வரை அனைத்து நிலைகளிலும் கடுமையான தரக்கட்டுப்பாடு விதிகள் மற்றும் கண்காணிப்பும் இணைந்து நடைமுறைப்படுத்தப்படும்.
மேலும், மடப்பள்ளி மற்றும் சேமிப்புக் கிடங்குகளை நவீனமயமாக்க ஆலோசனை வழங்குவதோடு, ரசாயன அல்லது பிற கலப்படங்களைத் தடுக்கும் அறிவியல்பூர்வ செயல்முறைகளும் பரிந்துரைக்கப்படும். நெய்யின் துாய்மை மற்றும் நறுமணத்தை துல்லியமாகச் சோதிப்பதற்கான சிறப்பு பயிற்சிகளுடன், திருமலைக்கு தொடர்ந்து நேரடி கள ஆய்வும் மேற்கொள்ளப்படும் என டிடிடி கூறியுள்ளது.





