சென்னை: கர்நாடகாவில் முதல்வர் விஜய் கார் ஓட்டும் காட்சி இடம்பெற்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து சர்ச்சை எழுந்துள்ளது. இதையடுத்து அந்த வீடியோவை கட்சியினர் சமூக வலைதளங்களில் இருந்து நீக்கி வருவதாக கூறப்படுகிறது.
கடந்த வாரம் விஜய் கர்நாடக மாநிலம் கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் தரிசனம் செய்தார். கோவிலில் இருந்து திரும்பும் போது அவர் தானே கார் ஓட்டியதாகவும், காருக்குள் இருந்த ஒருவர் அதை வீடியோவாக பதிவு செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
“அண்ணன் எவ்வளவு ஸ்டைலாக கார் ஓட்டுகிறார்” போன்ற தலைப்புகளுடன் அந்த வீடியோ வெளியிடப்பட்ட நிலையில், விஜயின் சீட் அருகே இருந்த பிளாஸ்டிக் டம்ளர் மற்றும் கார் ஓட்டும்போது சீட் பெல்ட் அணியவில்லை என்ற குற்றச்சாட்டு கவனம் பெற்றது.
இதையடுத்து, “அந்த வீடியோவை யாரும் பயன்படுத்த வேண்டாம்” என த.வெ.க. தரப்பில் வாய்மொழி உத்தரவு போடப்பட்டதாக கூறப்படுகிறது. வீடியோவை பகிர்ந்த பலரும் தங்கள் கணக்குகளில் இருந்து அதை நீக்கி வருகின்றனர்.
மேலும், எதிர்க்கட்சியினர் பதிவிடும் கணக்குகளிலும் அந்த வீடியோ நீக்கப்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது. தனியார் விளம்பர நிறுவனம் ஒன்று உரிமை கோரி சமூக வலைதள நிறுவனங்களுக்கு புகார் அனுப்புகிறது என்றும், “வீடியோ எடுத்தது யார், வெளியிட்டது யார், நீக்கும் அளவுக்கு அதில் என்ன உள்ளது?” என எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.





