தென் துருவத்தில் உள்ள அன்டார்டிகாவில் வழக்கத்திற்கு மாறாக கடுமையான வெப்ப அலை வீசுவதால், அங்குள்ள பனிப்பாறைகள் வேகமாக உருகத் தொடங்கியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகின் ஐந்தாவது பெரிய கண்டமான அன்டார்டிகா முழுவதும் பனியால் மூடப்பட்டுள்ளது. அங்கு உலகின் நன்னீரில் சுமார் 70% பனியாகச் சேமிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
டிரினிட்டி தீபகற்பம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளும் பல நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், தற்போது இயல்பைவிட 20 டிகிரி செல்ஷியஸ் வரை அதிக வெப்பம் நிலவுவதாக கூறினர். ஜூன் 6 அன்று 15.4 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானதாகவும், இது மிகப்பெரிய மற்றும் ஆபத்தான காலநிலை மாற்றத்தின் அறிகுறியாக இருக்கலாம் என்றும் அவர்கள் எச்சரித்தனர்.
மேலும், ‘காலின்ஸ்’ பனிப்பாறையின் உச்சிக்கு சென்றபோது, கடுமையான வெப்பத்தால் வெளிப்புற பனிக்கட்டிகள் உருகிக் கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்தனர். உலக வெப்பமயமாதலும் ‘எல் நினோ’ போன்ற வானிலை நிகழ்வுகளும் வெப்பத்தை மேலும் உயர்த்தி, முக்கியமான ‘த்வைட்ஸ்’ பனிப்பாறை உள்ளிட்டவற்றில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம் என்ற அச்சமும் வெளியிடப்பட்டுள்ளது.





