டாக்காவில் தீப்பந்தப் பேரணி

ஸ்ரீராமர் படம் அவமதிக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து வங்கதேசத்தில் டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் தீப்பந்தம் ஏந்தி பேரணி நடத்தினர். இந்த சம்பவம் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிரட்டலால் சிலை திட்டம் தற்காலிக நிறுத்தம்

கைபந்தா மாவட்டத்தின் பலாஷ்பாரி உபஜிலாவில், நாட்டின் மிகப்பெரிய ஸ்ரீராமர் சிலையை அமைக்கும் திட்டத்தை நிறுத்துமாறு சில குழுக்கள் மிரட்டல் விடுப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து கட்டுமானப் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு வழங்க கோவில் நிர்வாகம் கோரிக்கை

கோமர்பூர் ஸ்ரீ ஸ்ரீ ராதா கோவிந்தா கோவில் கமிட்டியின் நிறுவனர் மற்றும் தலைவர் ஹரிதாஸ் சந்திர தாஸ், 81 அடி உயர சிலையின் பணிகள் சுமார் 80% நிறைவடைந்துள்ளதாக தெரிவித்தார். சில “பயங்கரவாத குழுக்கள்” மிரட்டுவதால் அச்சத்தில் பணிகளை நிறுத்தியதாக கூறி, பணியை முடிக்க பிரதமர் தாரிக் ரஹ்மான் மற்றும் அதிகாரிகள் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

சிறுபான்மையினர் நடவடிக்கை கோரல்

மேலும் கைபந்தாவில் உள்ள ராதா-கோவிந்தா கோவிலை இடிக்க அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. மிரட்டல் விடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, சிலை கட்டுமானத்தை மீண்டும் தொடங்க அனுமதிக்க வேண்டும் என ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் வலியுறுத்தி வருகின்றனர்.

மத உணர்வுகள் புண்பட்டதாக மாணவர்கள் கருத்து

டாக்கா பல்கலைக்கழக போராட்டத்தில், ஜெகன்னாத் ஹால் மாணவர் சங்கத்தின் சமூக நலச் செயலாளர் ராம் பிரசாத் சஹா தோபு பேசுகையில், ஒரு தீவிரவாதக் குழு ஸ்ரீராமர் குறித்து வதந்திகளை பரப்பியதாகவும், பின்னர் மற்றொரு குழு ஸ்ரீராமர் படத்தை அவமதித்ததாகவும் கூறினார். இதனால் ஹிந்து சமூகத்தின் மத உணர்வுகள் புண்பட்டதாக அவர் தெரிவித்தார்.