ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், இந்தியர்கள் ஒருபோதும் அடிமைகளாக இருக்க முடியாது என்று தெரிவித்தார். நாட்டின் வலிமை ஒற்றுமைதான் என்றும் அவர் கூறினார்.

ராஜஸ்தானில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், எதிரணியுடன் ஒப்பிடுகையில் படை சிறியதாகவும், ஆயுதங்களும் செல்வமும் குறைவாகவும் இருக்கலாம்; ஆனால் உண்மை நம் பக்கம் இருந்தால் வெல்ல முடியும் என்றார். இந்தியர்கள் பண்பட்ட மக்கள்; அடிமைத்தனத்தை ஏற்க மாட்டோம் எனவும் வலியுறுத்தினார்.

இந்திய வரலாறு அடிமைத்தனத்தின் வரலாறு அல்ல; மாறாக நம்மை அடிமைப்படுத்த முயன்றவர்களுக்கு எதிரான போராட்டங்களின் வரலாறாகவே அதை பார்க்க வேண்டும் என்று அவர் கூறினார்.

ஒற்றுமையாக இருக்க மனதளவில் ஒன்றிணைந்திருப்பதே முக்கியம்; இதுவே இந்தியப் பண்பாடு என்றும், ஒற்றுமையே நமது வலிமை என்றும் பாகவத் தெரிவித்தார். பல விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், எல்லையில் எதிரி சவால் விடுக்கும் போது அனைத்தையும் மறந்து ஒன்றிணைந்து போராடுகிறோம் என்றார்.

வெளிப்புற அச்சுறுத்தல்கள் இல்லாத நேரங்களிலும் இந்தியா ஒற்றுமையுடன் திகழ வேண்டும் என்றும் அவர் கூறினார்.