புதுடில்லி: நீட் தேர்வு நடைபெறும் காலத்தில் டெலிகிராம் செயலிக்கு தற்காலிக கட்டுப்பாடு விதிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், அதைப் பற்றி கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்பியும் லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தியை பாஜ கடுமையாக விமர்சித்தது.

ராகுல் வெளியிட்ட பதிவில், வினாத்தாள் கசிவைத் தடுக்க டெலிகிராமை தடை செய்வது “திருடனைப் பிடிப்பதற்குப் பதிலாக பாதிக்கப்பட்டவரின் வீட்டையே பூட்டி வைப்பது” போன்றது என குறிப்பிட்டார். மாணவர்கள் குறிப்புகள், மாதிரித் தேர்வுகள், கலந்துரையாடல்கள் உள்ளிட்ட படிப்பு தேவைகளுக்காக டெலிகிராமை நம்பியிருப்பதாகவும், இந்த வசதியைப் பறிப்பதால் கசிவு பிரச்னை தீராது என்றும் அவர் வாதிட்டார்.

மேலும் இது முழுமையான தீர்வு அல்ல என்றும், அடுத்ததாக வாட்ஸ்அப் போன்றவற்றையும் தடை செய்வார்களா எனவும் கேள்வி எழுப்பினார். தேர்வு நாளன்று கடுமையான சோதனைகள், வினாத்தாள் போக்குவரத்து போன்ற “நாடகங்கள்” நடக்கும் நிலையில், பிரச்னையின் “வேர்” மீது நடவடிக்கை இல்லை எனவும் அவர் குற்றம்சாட்டினார்.

இதற்கு பதிலளித்த பாஜ எம்பி சுதான்ஷு திரிவேதி, ராகுலின் கருத்துக்கள் அவரது “தீய” மற்றும் “மிகவும் அருவருப்பான” மனநிலையை வெளிப்படுத்துவதாக கூறினார். மேலும், உணர்வுப்பூர்வமான சூழலை பயன்படுத்தி மாணவர்களின் உணர்ச்சிகளை அரசியல் லாபத்திற்கு திருப்ப முயல்கிறார் எனவும் அவர் விமர்சித்தார்.