புதுடில்லி: 2024-25 நிதியாண்டில் உத்தர பிரதேசம், குஜராத், ஜார்க்கண்ட், மணிப்பூர் உள்ளிட்ட 13 மாநிலங்கள் வருவாய் உபரியை பதிவு செய்துள்ளன. தமிழகம், பஞ்சாப் போன்ற மாநிலங்கள் வருவாய் பற்றாக்குறையை சந்தித்துள்ளன என்று சி.ஏ.ஜி. வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தலைமை கணக்கு தணிக்கையாளர் (சி.ஏ.ஜி.) கே. சஞ்சய் மூர்த்தி, 2024-25க்கான மாநிலங்களின் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டார். இதில், 18 மாநிலங்கள் வருவாய் உபரியை இலக்காக வைத்திருந்த நிலையில், ஆண்டு முடிவில் 13 மாநிலங்கள் உபரியையும் 15 மாநிலங்கள் பற்றாக்குறையையும் பதிவு செய்ததாக கூறப்பட்டுள்ளது.
கோவா, ஜார்க்கண்ட், திரிபுரா, உத்தர பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் வருவாய் உபரியை பதிவு செய்தன. மேலும், 15-வது நிதிக் குழு நிர்ணயித்த மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (ஜி.எஸ்.டி.பி.) 3% என்ற அளவுகோலை விட 18 மாநிலங்களில் நிதி பற்றாக்குறை அதிகமாக இருந்ததாகவும் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக மாநிலங்களின் நிகர வருவாய் பற்றாக்குறை ரூ.2.19 லட்சம் கோடி. 28 மாநிலங்களின் மொத்த வருவாய் வரவான ரூ.40.52 லட்சம் கோடியில் சுமார் 50% மாநிலங்களின் சொந்த வரி வருவாயிலிருந்து கிடைத்ததாகவும், அதில் மாநில ஜி.எஸ்.டி. மட்டும் 43%க்கும் மேல் பங்களித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களின் மொத்த பட்ஜெட் செலவு ரூ.51.20 லட்சம் கோடி. இதில் சம்பளம், ஓய்வூதியம், வட்டி செலுத்துதல் போன்ற கட்டாய செலவுகள் 43%க்கும் மேல் உள்ளன; இந்த விகிதம் நாகாலாந்தில் 74% ஆக அதிகமாகவும், மஹாராஷ்டிராவில் 29% ஆக குறைவாகவும் உள்ளது. 2025 மார்ச் 31 நிலவரப்படி மாநிலங்களின் மொத்த கடன் ரூ.90.51 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாகவும், ஆந்திரா, அசாம், குஜராத், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, ஒடிஷா, உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் முந்தைய ஆண்டை விட 2024-25ல் நிதி பற்றாக்குறை கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் அறிக்கை கூறுகிறது.





