பிரான்சின் ஈவியான் நகரில் 52வது ஜி-7 உச்சி மாநாடு தொடங்கியது. இதில் அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
ஜி-7 உறுப்புநாடுகளுடன், இந்தியா, பிரேசில், எகிப்து, கென்யா உள்ளிட்ட பல நாடுகள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கின்றன.
மாநாட்டை ஒட்டி ஆறு நாள் ஐரோப்பா சுற்றுப்பயணத்தில் உள்ள கனடா பிரதமர் மார்க் கார்னி, அயர்லாந்தின் டிரினிட்டி கல்லூரியில் உரையாற்றினார். ஜி-7 நாடுகள் மட்டுமே ஒட்டுமொத்த உலகையும் கட்டுப்படுத்தும் காலம் முடிந்துவிட்டதாகவும், அப்படியொரு பாவனையையும் இனி செய்யப் போவதில்லை என்பதை ஜி-7 நாடுகள் உணர்ந்து ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இன்றைய உலகளாவிய சவால்களுக்கு தீர்வு காண பரந்த சர்வதேச ஒத்துழைப்பும் மாற்று சிந்தனைகளும் அவசியம் என ஜி-7 ஏற்றுக் கொண்டுள்ளதாக கார்னி கூறினார். உலகப் பொருளாதாரம் மற்றும் அரசியலில் ஏற்படும் மாற்றங்களை இந்தியாவின் பங்கேற்பு பிரதிபலிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.





