சென்னை: மின் தடை தொடர்பாக பொதுமக்களிடமிருந்து வரும் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து, மின்சார விநியோகத்தை விரைவில் மீட்டமைக்க அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.
தலைமை செயலகத்தில் முதல்வர் தலைமையில் நடைபெற்ற மின் துறை ஆய்வு கூட்டத்தில் இந்த உத்தரவு வழங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் மின் உற்பத்தி மற்றும் மின் கொள்முதல் போதுமான அளவில் உள்ளதால் பற்றாக்குறை இல்லை என்றும் அரசு தெரிவித்தது.
அரசின் அறிக்கைப்படி, சென்னை உள்ளிட்ட நகர்ப்புறங்களின் சில பகுதிகளில் பழமையான மின் உபகரணங்கள், நிலத்தடி மின் கேபிள் பழுதுகள், அதிகரித்த மின் பயன்பாடு மற்றும் மின் கேபிள்கள் சேதம் போன்ற காரணங்களால் மின் தடைகள் ஏற்படுகின்றன.
இதற்கான நிரந்தர தீர்வாக, ரூ.2,275 கோடி மதிப்பீட்டில் மின் விநியோக கட்டமைப்பை மேம்படுத்தும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. மேலும் ரூ.10,109 கோடி செலவில் 121 புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும், ரூ.15,032 கோடி மதிப்பீட்டில் 231 துணை மின் நிலையங்கள் புதிதாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
சேவையை மேம்படுத்த 77 புதிய மின் தடை நீக்க மையங்கள், ஏழு கூடுதல் பழுது நீக்கும் குழுக்கள், 125 பழுது நீக்கும் வாகனங்கள் மற்றும் 10 உயர்மட்ட கண்காணிப்பு குழுக்கள் செயல்பாட்டில் உள்ளன என்றும் அரசு தெரிவித்தது. மேலும், மின் பழுதுகளை சரி செய்ய 15,058 மின் பணியாளர்களை முறைப்படி நியமிக்கவும், தேவையான தளவாடப் பொருட்களை உடனடியாக கொள்முதல் செய்யவும், பணியாளர்களை ரோந்து பணியில் ஈடுபடுத்தவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மின் கோளாறுகளை மின்னகம் சேவை மையங்கள் வழியாக தெரிவித்து உடனடி தீர்வு பெறலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.




