புதுடில்லி: நாடு முழுதும் டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்தகங்களில் இனி இருமல் மருந்து வாங்க முடியாது என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில், தமிழகத்தைச் சேர்ந்த ‘ஸ்ரேசன் பார்மாசூட்டிகல்ஸ்’ நிறுவனம் தயாரித்த ‘கோல்ட்ரிப்’ என்ற இருமல் மருந்தை குடித்த 24 குழந்தைகள் கடந்த ஆண்டு அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் நாடு முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. விசாரணையில் அந்த மருந்தில் ‘டைஎத்திலீன் கிளைகோல்’ என்ற நச்சுப்பொருள் கலந்திருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து ‘கோல்ட்ரிப்’ இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகளை குடித்ததால் உஸ்பெகிஸ்தான் போன்ற நாடுகளிலும் குழந்தைகள் உயிரிழந்ததாக வெளியான தகவல்கள் நாட்டின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தியதாக குறிப்பிடப்படுகிறது.
இந்த நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், டாக்டர் பரிந்துரை இல்லாமல் இருமல் மருந்துகளை மருந்தகங்கள் விற்பனை செய்யக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மருந்து விதிகள்–1945ன் கீழ் உள்ள ‘அட்டவணை கே’ பட்டியலில் இருந்து ‘சிரப்’ என்ற வார்த்தை நீக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மருந்துகள் மற்றும் அழகுசாதன பொருட்கள் சட்டத்தின் 12 மற்றும் 33 ஆகிய பிரிவுகளின் கீழ் உள்ள அதிகாரங்களை பயன்படுத்தி, மருந்துகள் தொழில்நுட்ப ஆலோசனை குழுவுடன் கலந்தாலோசித்த பின் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், இது மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.





