டெஹ்ரான்: ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் பதற்றம் நீடிக்கும் நிலையில், இந்தியக் கொடி ஏந்திய வணிகக் கப்பலான எல்.என்.ஜி. (திரவ இயற்கை எரிவாயு) கப்பல் ‘திஷா’ அந்தக் கடல் வழியை பாதுகாப்பாக கடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், அமெரிக்கா–ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், ஜூன் 19 அன்று ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு ஜலசந்தி திறக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

ஆனால், ஒப்பந்த உடன்பாடு ஏற்பட்டதாக கூறப்படும் சில நிமிடங்களிலேயே ஹார்முஸ் வழியாக சரக்குக் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கியதாக தகவல்கள் வெளியாகின. அதே நேரத்தில், எல்.என்.ஜி. ஏற்றிய ‘திஷா’ எந்த இடையூறும் இன்றி ஜலசந்தியை கடந்தது.

இந்தச் சம்பவம், இதே கடல் வழியை பயன்படுத்தி இந்திய துறைமுகங்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ள மற்ற கப்பல்களுக்கு நம்பிக்கையை அளிப்பதாக கூறப்படுகிறது. இந்திய மற்றும் வெளிநாட்டு கொடிகளுடன் 34 வணிகக் கப்பல்கள் இந்த வழியில் செல்ல உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

62,370 டன் எல்.என்.ஜி. ஏற்றிய ‘திஷா’ கப்பல், குஜராத் மாநிலம் பரூச் மாவட்டத்தில் உள்ள தஹேஜ் துறைமுகத்தை ஜூன் 17 அன்று வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அந்தப் பகுதியில் பாதிக்கப்பட்டுள்ள முக்கிய 16 இந்திய கப்பல்களில் எட்டு கப்பல்கள் யூரியா, நான்கு கப்பல்கள் டை-அம்மோனியம் பாஸ்பேட், மூன்று கப்பல்கள் கந்தகம், ஒரு கப்பல் அம்மோனியா ஆகியவற்றை ஏற்றி வருவதாக மத்திய உரத்துறை தெரிவித்துள்ளது.