உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், கோவா ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் திட்டமிட்ட காலத்துக்கு முன்பே நடத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான தயாரிப்புகளை தீவிரப்படுத்த மாநில தலைமைகளுக்கு பா.ஜ.க. மேலிடம் அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக வீடு வாரியான பட்டியல் தயாரிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு 2027 பிப்ரவரியில் நடைபெறவுள்ளதாகவும், அதில் ஜாதி வாரி கணக்கெடுப்பும் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சூழலில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மாநில சட்டசபை தேர்தல்களை முன்கூட்டியே நடத்துவது குறித்து பா.ஜ.க. மேலிடம் பரிசீலித்து வருவதாக தகவல். மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்குப் பயன்படுத்தப்படும் அரசு ஊழியர்களையே தேர்தல் பணிகளுக்கும் பயன்படுத்த வேண்டியதால், பணியாளர் பற்றாக்குறை மற்றும் பணிச்சுமை அதிகரிக்கும் என்பதே முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
அடுத்தாண்டு பிப்ரவரியில் நடைபெற வேண்டிய கோவா, உ.பி., உத்தரகண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் தேர்தலை முன்னேற்றுவது குறித்து விருப்பம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நான்கு மாநிலங்களில் பஞ்சாபைத் தவிர மற்ற மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சியில் இருப்பதால், சட்டசபையை கலைத்து முன்தேர்தலுக்கு செல்லுவதில் பெரிய சிக்கல் இருக்காது எனவும் குறிப்பிடப்படுகிறது. பஞ்சாபில் முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறுகிறது; அவரும் முன்தேர்தல் குறித்து ஆலோசித்து வருவதாக தகவல்.
இதற்கிடையில், மணிப்பூரில் அடுத்தாண்டு பிப்ரவரியில் சட்டசபை தேர்தல் நடத்தப்பட வேண்டிய நிலையில், அங்குள்ள சூழலை கருத்தில் கொண்டு சில மாதங்கள் தள்ளிப் போகலாம் எனவும் கூறப்படுகிறது.





