முதல்வர் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஆகியோரின் வேட்பு மனுக்களில் தாக்கல் செய்யப்பட்ட சொத்து விவரங்களில் முரண்பாடு இருப்பதாக கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.
விஜய் தொடர்பான வழக்கில், பெரம்பூர் தொகுதி வாக்காளர் விக்னேஷ் மனு தாக்கல் செய்து, பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளுக்கான வேட்பு மனுக்களில் குறிப்பிடப்பட்ட சொத்து மதிப்புகள் வேறுபடுகின்றன என சுட்டிக்காட்டினார். இந்த விவரங்கள் உண்மையா என்பதை வருமான வரித் துறையும் தேர்தல் ஆணையமும் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என அவர் கோரினார்.
இதேபோல், சேப்பாக்கம்–திருவல்லிக்கேணி தொகுதி வாக்காளர் குமரன், உதயநிதி தற்போது தாக்கல் செய்த சொத்து விவரங்களுக்கும் 2021 தேர்தல் காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட விவரங்களுக்கும் வேறுபாடு உள்ளது என கூறி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுக்கள் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விஜய் ஏற்கெனவே திருத்தப்பட்ட வேட்பு மனுவை தாக்கல் செய்துவிட்டதாகவும், சொத்து விவரங்கள் சரியாக உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், இத்தகைய புகார்கள் தேர்தல் ஆணையத்திடமே முன்வைக்கப்பட வேண்டும்; இதுபோன்ற மனுக்கள் முன்பும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன என்றும் வாதிட்டார்.
இந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், விஜய் மற்றும் உதயநிதி தொடர்பான மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்ட பாஜ வேட்பாளர் தமிழிசைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.





