அதிமுகவைச் சேர்ந்த நான்கு எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த விவகாரத்தில் குதிரை பேரம் நடந்ததாக கூறி சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனுவில், மே 13-ஆம் தேதி சட்டசபையில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த 25 அதிமுக எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகரிடம் அதிமுக கடிதம் அளித்ததாக குறிப்பிடப்பட்டது.

அந்த கோரிக்கை நிலுவையில் இருந்த நிலையில், மதுராந்தகம் மரகதம் குமாரவேல், பெருந்துறை ஜெயகுமார், தாராபுரம் சத்தியபாமா, அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா ஆகிய நான்கு பேர் பதவியை ராஜினாமா செய்து, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் தவெகவில் இணைந்ததாக மனுவில் கூறப்பட்டது. தலைமைச் செயலகத்தில் அவர்களுக்கு தவெக உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டதாகவும், இடைத்தேர்தலில் அவர்களுக்கு ‘சீட்’ வழங்கப்படும் என நம்பப்படுவதாகவும் மனுதாரர் குறிப்பிட்டார்.

தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, எந்த ஆதாரமும் இல்லாமல் யூகமும் சந்தேகமும் அடிப்படையாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறியது. குற்றச்சாட்டுகளுக்கான ஆரம்பகட்ட முகாந்திரம் நிரூபிக்கப்பட்டால் மட்டுமே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியும் எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்தது.