புதுடில்லி: மார்ச் முதல் மே வரை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் நைஜீரியாவிலிருந்து 60 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்துள்ளன. ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதால் விநியோகத்தில் தடங்கல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில், கச்சா எண்ணெய் வரத்து பாதிக்கப்படாமல் இருக்க இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் மாற்று வழிகளிலும் மூலங்களிலும் இறக்குமதியை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி), பாரத் பெட்ரோலியம் (பிபிசிஎல்), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (ஹெச்பிசிஎல்) ஆகியவை மூன்று மாதங்களில் இந்த அளவு கச்சா எண்ணெயை கொண்டு வந்துள்ளன.
இந்த கச்சா எண்ணெய் நைஜீரியாவின் அக்வா இபோம் எண்ணெய் வயலில் இருந்து எடுக்கப்பட்டதாகவும், அந்நாட்டைச் சேர்ந்த சீப்கோ (SEEPCO) நிறுவனம் ஏற்றுமதி செய்ததாகவும் கூறப்படுகிறது. ஹார்முஸ் ஜலசந்தியை தவிர்த்து அட்லாண்டிக் வழியாக இந்தியாவுக்கு கப்பல் மூலம் கொண்டு வரப்பட்டதாக தகவல்.
சர்வதேச சந்தையில் உருவான விநியோக தடங்கல்களுக்கிடையே, மாற்று போக்குவரத்து வழிகளை பயன்படுத்தி கச்சா எண்ணெய் வரத்தை உறுதி செய்யும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.





