சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. எதிர்பாராத பின்னடைவை சந்தித்ததைத் தொடர்ந்து, மாநில அமைப்பில் அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள தேசிய தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அக்கட்சி வட்டாரங்களின் தகவலின்படி, தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரனை கேரள மாநில ஆளுநராக நியமிக்க டெல்லி தலைமை பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. தேர்தல் தோல்விக்குப் பிந்தைய மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக இந்த மாற்றம் பேசப்படுவதாகவும் கூறப்படுகிறது.
மேலும், தற்போது கேரள ஆளுநராக உள்ள ராஜேந்திர அர்லேகரை தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக நியமிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், புதிய மாநிலத் தலைவர் தேர்வு குறித்து ஆலோசனை நடத்த பா.ஜ.க. தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ் விரைவில் தமிழகம் வர உள்ளார். அவரது வருகைக்குப் பிறகு புதிய மாநிலத் தலைவர் அறிவிப்பு வெளியாகும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.





