சென்னை: ஒப்பந்ததாரர் தேர்வு நடைமுறையில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு பொதுப்பணி துறை புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
பொதுப்பணி துறை செயலர் வெளியிட்ட அரசாணையில், போட்டியை குறைக்கும் நோக்கில் தேவையற்ற கட்டுப்பாடுகள் விதிப்பதையோ, குறிப்பிட்ட நபருக்கு ஏற்ற நிபந்தனைகளை சேர்ப்பதையோ தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒப்பந்ததாரர் தேர்வு முழுமையாக 100 சதவீதம் ஆன்லைன் முறையிலேயே நடைபெற வேண்டும் என்றும், டெண்டர் செயல்முறையின் வெளிப்படைத்தன்மையை பாதிக்கும் எந்தவொரு தலையீடு அல்லது நேரடி தொடர்பும் அனுமதிக்கக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.
டெண்டர் கோரும் அதிகாரிகள், பங்கேற்பாளர்கள் பதிலளிக்க போதுமான கால அவகாசம் வழங்க வேண்டும். போட்டியை கட்டுப்படுத்தும் நோக்கில் “பேக்கேஜ் டெண்டர்”களை தவிர்த்து, தகுதி வாய்ந்த ஒப்பந்ததாரர்கள் பங்கேற்க நியாயமான வாய்ப்புகளை வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஒப்பந்ததாரர் தகுதியிழப்பு அல்லது ஒப்பந்தப்புள்ளி நிராகரிப்பு போன்ற முடிவுகளுக்கான காரணங்களை டெண்டர் மதிப்பீட்டு குழுக்கள் எழுத்துப்பூர்வமாக பதிவு செய்து தெரிவிக்க வேண்டும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.





