சென்னை: முதல்வர் விஜய்க்கு, தன்னைப் பற்றியும் தனது ஆட்சியைப் பற்றியும் வரும் செய்திகளை முதலில் படித்து, அதில் உள்ள உண்மையை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

சென்னை வானகரத்தில் நடைபெற்ற திமுக எம்பி இல்லத் திருமண விழாவில் பேசிய அவர், ஒரு மாநிலக் கட்சி எப்படி இயங்க வேண்டும் என்பதற்கு திமுக எடுத்துக்காட்டாக இருப்பதாக கூறினார். ஒரு தேர்தல் தோல்விக்கே பல கட்சிகள் காணாமல் போகும் நிலையில், திமுக 75 ஆண்டுகளாக கொள்கை மற்றும் லட்சியத்துக்காக தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் நலனுக்காக திமுக பாடுபடுகிறது என்றும் அவர் கூறினார். மேலும், சமூக ஊடகங்கள் இன்று எந்த அளவுக்கு பரவலாக உள்ளன என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

சமூக ஊடகங்களில் ஒருகாலத்தில் தோற்றம், உடை, தனிப்பட்ட விஷயங்கள் போன்றவற்றை மையமாக வைத்து செய்திகள் பரவினாலும், அவை மறைந்து நாட்டில் நடக்கும் அக்கிரமங்கள் குறித்த செய்திகள் முன்னிலைக்கு வரும் நிலை இருப்பதாக ஸ்டாலின் பேசினார்.

இந்நிலையில், தமிழகத்தில் முதல்வராக இருப்பவர் தன் ஆட்சி குறித்து வரும் செய்திகளைப் படித்து அதில் உள்ள உண்மையை கண்டுபிடித்து, அதற்கேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தனது அன்பான வேண்டுகோள் என்று அவர் தெரிவித்தார்.