புதுடில்லி: மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக எரிபொருள், உரம் மற்றும் உலகளாவிய விநியோக சங்கிலிகளில் ஏற்பட்ட தடங்கல்கள் இன்னும் கணிசமான காலத்திற்கு வளரும் நாடுகளை பாதிக்கக்கூடும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
பிரான்சில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் பங்கேற்ற பின்னர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், சமச்சீர், பகிரப்பட்ட மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுப்பது என்ற தலைப்பிலான அமர்வில் உரையாற்றியதாக அவர் கூறினார். ஜி7 தலைமை வகிக்கும் பிரான்ஸ் இந்த தலைப்புக்கு முக்கியத்துவம் அளித்ததை அவர் பாராட்டினார்.
வளர்ச்சி என்பது ஜிடிபி அல்லது வர்த்தக எண்களால் மட்டும் அளவிடப்படக் கூடாது என்றும், வளர்ச்சி யாருக்காக, யாருடன், எந்த திசையில் என்ற கேள்விகளே முக்கியம் என்றும் மோடி குறிப்பிட்டார். அனைவரையும் உள்ளடக்கும் அணுகுமுறை மற்றும் ஜனநாயக ரீதியான அதிகாரமளித்தல் ஆகியவற்றின் அடிப்படையில் பகிரப்பட்ட வளர்ச்சியே இலக்குகளை நனவாக்கும் என இந்தியாவின் அனுபவம் காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேற்கு ஆசிய நெருக்கடியை சுட்டிக்காட்டிய அவர், சர்வதேச ஒற்றுமையை உண்மையாக வலுப்படுத்த வேண்டுமெனில், மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாடுகள் மட்டும் சுமையை தாங்கும் நிலை ஏற்படக் கூடாது என்றார். ஆப்ரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் பசுபிக் தீவு நாடுகளில் இணைப்பு திட்டங்களை முன்னெடுக்கலாம் என்றும், ஜி7 மூலதனம், இந்தியாவின் திறன் மற்றும் வளரும் நாடுகளின் உரிமையுடைமை ஆகியவற்றை இணைக்கும் சர்வதேச அணிதிரட்டலை பரிசீலிக்கலாம் என்றும் அவர் கூறினார்.
பல நாடுகள் முதியோர் அதிகம் உள்ள சமூகங்களாக மாறி வருவதாகவும், அதே நேரத்தில் இந்தியாவிலும் வளரும் நாடுகளிலும் இளம் திறமையாளர்கள், தொழில் முனைவோர் மற்றும் திறன்கள் பெருமளவில் உள்ளதாகவும் மோடி தெரிவித்தார். இந்த வாய்ப்பை பயன்படுத்த உலகளாவிய திறன்கூட்டமைப்பை உருவாக்கி இணைந்து செயல்பட வேண்டிய தேவை இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.





