சென்னை: ‘வீ தி லீடர்ஸ்’ இயக்கத்தின் நிறுவனர் அண்ணாமலை, அடுத்த மாதம் அரசியல் நடவடிக்கை தொடங்கும் என்றும், ஜூலையில் இயக்கத்தின் செயல்பாட்டில் புதிய தன்மை வெளிப்படும் என்றும் தெரிவித்தார்.

நேற்று வெளியிட்ட வீடியோ பதிவில், தற்போது இது ஒரு மக்கள் இயக்கமாக செயல்படுகிறது; அரசியல் இயக்கமாக மாறிய பின் செயல்பாடுகள் வேறு வடிவம் எடுக்கும் என அவர் கூறினார்.

‘வீ தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இதுவரை 18 லட்சம் பேர் இணைந்துள்ளதாக கூறிய அண்ணாமலை, யாரையும் தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் அழைத்து இணைக்கவில்லை என்றும், முன்பு தாம் சார்ந்திருந்த கட்சியினருக்கும் அழைப்பு விடுக்கவில்லை என்றும் தெரிவித்தார். எதிர்பார்ப்பில்லாமல் தானாக இணையும் போது தான் உண்மையான மக்கள் இயக்கமாக இருக்கும் எனவும் அவர் கூறினார்.

மேலும், ஓ.டி.பி. (ரகசிய குறியீடு) வழியாக இணைப்பு நடைபெறுகிறது என்றும், இணையும் நபர்கள் தேர்தலில் போட்டியிட விரும்புகிறார்களா அல்லது தன்னார்வலர்களாக செயல்பட விரும்புகிறார்களா என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறோம் என்றும் கூறினார். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ஆயிரக்கணக்கானோர் விருப்பம் தெரிவித்ததாகவும், இயக்கத்தை முன்னெடுத்து அரசியல் கட்சியாக மாறும் போது நல்ல அரசியலை கொண்டு வர தன்னார்வமாக செயல்பட லட்சக்கணக்கானோர் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்னும் பெரிய அளவில் செயல்பாடுகள் தொடங்கவில்லை என்றும், நம்பிக்கையுடன் இணைந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்தார்.