சென்னை: தமிழக சட்டசபையில் கவர்னர் உரையின் தொடக்கத்திலும், உரை முடிவிலும் தேசிய கீதம் பாடப்பட்டதை “சரித்திர நிகழ்வு” என தமிழக பொறுப்பு கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தெரிவித்துள்ளார்.
தவெக அரசின் முதல் சட்டசபை கூட்டம் இன்று கவர்னர் உரையுடன் தொடங்கியது. அவையில் கவர்னர் தனது உரையை வாசித்தார். இதன் போது, உரையின் முன்பும் பின்னும் தேசிய கீதம் பாடப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், 3 ஆண்டுகளுக்குப் பிறகு கவர்னரின் முழு உரையும் எந்த இடையூறும் இன்றி சட்டசபையில் வாசிக்கப் பெற்றது மனநிறைவைத் தருவதாக அவர் தெரிவித்தார்.
மேலும், மாநில அரசு மற்றும் மக்கள் மாளிகை இடையே இணக்கமான சூழல் நிலவ வேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்பை இது பிரதிபலிப்பதாகவும், மக்களாட்சியின் மாண்பை நிலைநாட்டும் வகையில் இது அமையும் என்றும் அவர் கூறினார். மக்கள் தேவைகளை பூர்த்தி செய்ய ஒருங்கிணைந்த, இணக்கமான உறவை அனைத்து தரப்பிலும் உருவாக்கி அனைவரும் இணைந்து பயணிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.





