மறைந்த கணவர் விட்டுச் சென்ற சொத்திலிருந்து நிலுவையில் உள்ள ஜீவனாம்சத் தொகையை மனைவி பெறலாம். ஆனால், கணவர் இறந்த பின் அந்த ஜீவனாம்சத்தை உயர்த்தி வழங்கக் கோர உரிமை இல்லை என்று மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மஹாராஷ்டிராவைச் சேர்ந்த வர்ஷா (62) மற்றும் நரேன் கோரேகாவ்ங்கர் ஆகியோருக்கு 1974-ல் திருமணம் நடந்தது. 1977-ல் இருவரும் பிரிந்தனர்; குழந்தைகள் இல்லை. 1980-ல் விவாகரத்து வழங்கப்பட்டபோது, வர்ஷாவுக்கு மாதம் ரூ.6,000 ஜீவனாம்சம் வழங்க நரேனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கிடையில் 2012 மார்ச்சில் நரேன் காலமானார். இதையடுத்து வர்ஷா குடும்பநல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து, கணவர் மறைவுக்குப் பின் நிலுவைத் தொகையை அவரது சொத்திலிருந்து வசூலித்துத் தரவும், விலைவாசி உயர்வு மற்றும் மருத்துவச் செலவுகளை காரணமாகக் காட்டி ஜீவனாம்சத்தை உயர்த்தவும் கோரினார்.

2023 பிப்ரவரியில் குடும்பநல நீதிமன்றம் நிலுவைத் தொகையை வசூலிக்க அனுமதி அளித்தாலும், ஜீவனாம்ச உயர்வை மறுத்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டை விசாரித்த நீதிபதிகள் பாரதி டங்க்ரே, மஞ்சுஷா தேஷ்பாண்டே ஆகியோர், கணவர் இறந்த பின் ஜீவனாம்ச உயர்வு அனுமதிப்பது தேவையற்ற சட்டப் போராட்டங்களுக்கு வழிவகுக்கும் எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

மேலும், கணவர் இறந்த பின் வாரிசுகள் தங்கள் முயற்சியால் சொத்தின் மதிப்பை உயர்த்தியிருந்தால், அந்த வளர்ச்சியில் முன்னாள் மனைவி உரிமை கோர முடியாது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. ஆனால், கணவர் உயிருடன் இருந்த காலத்தில் சேர்த்த சொத்துகளில் மனைவி பங்கு கேட்க முடியும்; வாரிசுகளின் பின்னர் நிதி வளர்ச்சியை முன்னாள் மனைவியுடன் பகிர அவர்கள் கடமைப்பட்டவர்கள் அல்ல என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.