புதுடில்லி: எத்தனால் கலந்த எரிபொருள் எறும்புகளை ஈர்க்கும் என சமூக ஊடகங்களில் பரவும் தகவல்கள் மற்றும் வீடியோக்கள் “போலி, ஆதாரமற்றவை” என்று பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) திட்டவட்டமாக மறுத்துள்ளது.

கச்சா எண்ணெய் தட்டுப்பாடு, விலை ஏற்ற இறக்கம் போன்ற காரணங்களால், வழக்கமான பெட்ரோல்–டீசலுக்கு மாற்றாக எத்தனால் கலப்பு எரிபொருள் பயன்பாட்டை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக வாகன தயாரிப்பு நிறுவனங்களும் இதற்கேற்ற வாகனங்களில் ஆர்வம் காட்டி வருகின்றன. சமீபத்தில் 85% எத்தனால் கலந்த எரிபொருள் அறிமுகம் செய்யப்பட்டதாகவும், இது வழக்கமான பெட்ரோலை விட லிட்டருக்கு சுமார் ரூ.20 குறைவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில், எத்தனால் கலந்த எரிபொருள் பயன்படுத்தும் வாகனங்களின் எரிபொருள் மூடிகளுக்கு அருகே எறும்புகள் மொய்ப்பது போல காட்டும் வீடியோக்கள் இணையத்தில் வைரலானது. ஆனால் அவை உண்மையை பிரதிபலிப்பதில்லை என பிபிசிஎல் கூறியுள்ளது.

தன் அறிக்கையில், பெட்ரோலுடன் கலப்பதற்குப் பயன்படுத்தப்படும் எரிபொருள் தர எத்தனால் நொதித்தல் மற்றும் காய்ச்சி வடித்தல் முறைகளில் தயாரிக்கப்படுவதால், சர்க்கரைச் சத்துக்கள் முழுமையாக நீக்கப்படுகின்றன என்று விளக்கியது. மேலும், அந்த எத்தனாலில் பூச்சிகளை விரட்டும் தன்மை கொண்ட மூலக்கூறுகள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது.

மேலும், கலப்புக்குப் பிறகும் பெட்ரோலின் ஹைட்ரோகார்பன் வாசனைதான் அதிகமாக இருக்கும் என்றும், வழக்கமான பெட்ரோலுடன் ஒப்பிடும்போது எத்தனால் கலந்த பெட்ரோலில் இருந்து நீராவியாகும் அளவும் குறைவாக இருக்கும் என்றும் பிபிசிஎல் கூறியது. எனவே, வாகனத்தின் எரிபொருள் மூடிகளுக்கு அருகே எறும்புகள் அல்லது பிற பூச்சிகளை ஈர்க்கும் எந்த காரணியும் அந்த எரிபொருளில் இல்லை என்று நிறுவனம் தெரிவித்தது.