புதுடில்லி: டெலிகிராம் செயலி பயங்கரவாதம், சைபர் குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு தவறாக பயன்படுத்தப்படுவதாக மத்திய அரசு டில்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.,) பரிந்துரையை அடிப்படையாக கொண்டு, நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு மோசடி கும்பல்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில், டெலிகிராமுக்கு ஜூன் 22 வரை தற்காலிக கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்த உத்தரவை எதிர்த்து டெலிகிராம் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அரசின் கோரிக்கைகளுக்கு இணங்கியதாகவும், அதிகாரிகள் சுட்டிக்காட்டிய சட்டவிரோத சேனல்கள் ஏற்கனவே நீக்கப்பட்டதாகவும் கூறி, இடைக்காலக் கட்டுப்பாடுகளுக்கு எதிராக அவசர நிவாரணம் கோரியுள்ளது.
இதற்கு பதிலாக தாக்கல் செய்த மனுவில், குற்றவாளிகளை இணைக்கும் “புதிய டார்க் வெப்” போல டெலிகிராம் மாறிவிட்டதாக மத்திய அரசு கூறியுள்ளது. மோசடி இணைப்புகள் மூலம் டார்க் வெப் அமைப்புகளுக்கு வழிகாட்டும் லிங்குகளை சேனல்களில் பதிவிட இந்த செயலி பயன்படுத்தப்படுவதால், குற்றவாளிகளை கண்காணிப்பதும் அடையாளம் காண்பதும் கடினமாகிறது என தெரிவித்தது.
மேலும், சிறார்களுக்கு எதிரான பாலியல் சுரண்டல் உள்ளடக்கங்கள், இணையவழி மோசடிகள், பிரிவினைவாதம், பொது அமைதியை குலைக்கும் முயற்சிகள் மற்றும் தவறான தகவல் பரப்பல் போன்றவற்றுக்கும் டெலிகிராம் தவறாக பயன்படுத்தப்படுவதாக அரசு சுட்டிக்காட்டியது. திரைப்படங்கள், இணைய தொடர்கள், பதிப்புரிமை பெற்ற புத்தகங்கள் போன்றவை பல சேனல்களில் பகிரப்படுவதால் வருவாய் இழப்பு மற்றும் அறிவுசார் சொத்துரிமை மீறல்கள் ஏற்படுகின்றன என்றும் கூறியது. நீட் கசிவு தொடர்பாக பல புகார்கள் வந்ததாகவும், ஜூன் 3 அன்று நோட்டீஸ் அனுப்பியபோதும் தொடர்புடைய சேனல்கள்/குழுக்களை தடுக்க போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற கவலையை தெரிவித்ததாகவும், இத்தகைய உள்ளடக்கங்களை முன்கூட்டியே கண்டறிவதில் சிக்கல் இருப்பதை நிறுவனம் ஒப்புக்கொண்டதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.





