தி.மு.க. உடன் பா.ஜ.க. கூட்டணி அமைக்குமா என்பது குறித்து தேர்தல் நேரத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி பொறுப்பேற்ற 35 நாட்களிலேயே சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், பாலியல் வன்கொடுமை, கொலை உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
போதைப்பொருள் கட்டுப்பாட்டிலும் அரசு தோல்வியடைந்துள்ளதாக கூறிய அவர், காவல் துறைக்கு முழு சுதந்திரம் வழங்கப்படாததால் குற்றங்கள் அதிகரிக்கின்றன என்றார். மக்கள் பிரச்னைகளை தீர்ப்பதில் முதல்வர் விஜய் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை விலைபேசி வாங்க முயல்கிறார் என்றும், பிற கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை குதிரைபேரம் மூலம் இழுப்பதால் தேவையற்ற இடைத்தேர்தல்கள் நடத்தப்பட்டு அரசுப் பணம் வீணடிக்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.
கூட்டணி தொடர்பான முடிவு தேர்தல் காலத்தில் அறிவிக்கப்படும் என மீண்டும் தெரிவித்த அவர், வரும் காலம் பா.ஜ.க.வின் காலமாக இருக்கும் என்றும் கூறினார்.





