லோக்சபாவில் திரிணமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் அமர்ந்திருந்த இருக்கைகள் தற்போது தி.மு.க. எம்.பி.க்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை லோக்சபாவில் காங்கிரஸ் எம்.பி.க்களின் அருகே தி.மு.க. எம்.பி.க்களும் அமர்ந்து வந்தனர். தமிழக சட்டசபைத் தேர்தலை தி.மு.க. மற்றும் காங்கிரஸ் இணைந்து சந்தித்த பின்னணியும் இதற்கு காரணமாகக் கூறப்படுகிறது.

ஆனால் மாறிய அரசியல் சூழ்நிலையால் இனி காங்கிரஸ் எம்.பி.க்களுடன் சேர்ந்து அமர முடியாது; மாற்று இடத்தில் இருக்கை ஒதுக்க வேண்டும் என தி.மு.க. பாராளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதி கோரியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக, திரிணமுல் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டிருந்த மூன்றாவது பிளாக்கில் தி.மு.க. எம்.பி.க்களுக்கு இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் திரிணமுல் தரப்பில் அதிருப்தி உள்ள எம்.பி.க்களுக்கு தனி இடத்தில் இருக்கைகள் ஒதுக்குவது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.