அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (EPS), முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிராக கட்சிக்குள் ஒரு வலுவான மாற்றுச் சக்தியை உருவாக்கும் நோக்கில், முன்னாள் தி.மு.க. அமைச்சர் செந்தில் பாலாஜியை அ.தி.மு.க.வில் இணைக்க முயல்கிறார் என்ற தகவல் அக்கட்சியின் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

அந்த வட்டாரங்கள் கூறுவதன்படி, த.வெ.க. அரசுக்கு ஆதரவு அளித்த பின்னர் மீண்டும் EPS அணியில் வேலுமணி இணைந்தாலும், டில்லி தொடர்புகள் மற்றும் கவுண்டர் சமுதாயத்தில் உள்ள செல்வாக்கு காரணமாக அவர் தன்னை அரசியல் ரீதியாக வீழ்த்தக்கூடும் என்ற அச்சம் EPS-க்கு இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால், வேலுமணியை எதிர்த்து அரசியல் செய்யக்கூடிய ஒருவரை கட்சிக்குள் உருவாக்க முயன்ற EPS-க்கு சரியான முகம் கிடைக்கவில்லை என்றும், EPS-க்கு நெருக்கமான சிலர் “செந்தில் பாலாஜி பொருத்தமானவர்” என பரிந்துரைத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தேர்தல் முடிவுகள் வெளியானபோது த.வெ.க. ஆட்சியமைப்பதில் தடுமாறிய சூழலில், தி.மு.க.–அ.தி.மு.க. இணைந்து ஆட்சி அமைப்பது குறித்து பேச்சு நடந்ததாகவும், அந்த நேரத்தில் செந்தில் பாலாஜி முன்னணியில் பணிகளை கவனித்ததாகவும், பல ஆண்டுகளுக்குப் பிறகு EPS மற்றும் செந்தில் பாலாஜி நேரடியாக பேசியதாகவும் அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

மேலும், 2021-ல் கோவையில் 10 தொகுதிகளில் வென்ற அ.தி.மு.க. 2026-ல் ஒரு தொகுதியில் மட்டுமே வென்றதும், சில இடங்களில் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டதும்; அதே நேரத்தில் தி.மு.க. இரண்டு தொகுதிகளில் வென்று கோவையில் வளர்ந்ததும் செந்தில் பாலாஜியின் பங்கு என EPS நம்புவதாக கூறப்படுகிறது. வழக்கு மற்றும் விசாரணை தொடர்பான சிக்கல்களில் உள்ள செந்தில் பாலாஜி டில்லியில் திரைமறைவில் பேச்சு நடத்துவதாகவும், இதை சாதகமாக்க EPS முன்னாள் நீதிபதி மற்றும் தொழிலதிபர்கள் வழியாக பேச்சு நடத்தியதாகவும் கூறப்படுகிறது. கொங்கு மண்டலத்தில் செல்வாக்கு வழங்குவது மற்றும் வழக்குகளை “சரிக்கட்ட” உதவ முடியும் என்ற வகையில் பேசப்பட்டதாகவும், செந்தில் பாலாஜி இன்னும் மறுப்பு தெரிவிக்காமல் பா.ஜ.க. உள்ளிட்ட மாற்று வாய்ப்புகள் மற்றும் அ.தி.மு.க.வில் எதிர்கால பொறுப்புகள் குறித்து யோசித்து வருவதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.