அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) தனது மகன் அரசியலுக்கு வர மாட்டார் என்றும், இது குறித்து பத்திரிக்கை மற்றும் ஊடகங்கள் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் தெரிவித்தார். சென்னை சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது மகன் கட்சியில் அடிப்படை உறுப்பினராக மட்டுமே இருப்பதாகவும், எந்தப் பதவியிலும் இல்லை என்றும் கூறினார்.

மேலும், போதைப்பொருள் தடுப்பு, பெண்கள் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு ஆகியவற்றில் புதிய அரசு அளித்த உறுதிமொழிகள் நடைமுறையில் இல்லை என அவர் குற்றம்சாட்டினார். ஆட்சி பொறுப்பேற்ற முதல் 38 நாட்களில் 150 போக்சோ வழக்குகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் 126, கொலைகள் 130 நடந்ததாக அவர் கூறினார்.

விவசாயக் கடன் தள்ளுபடி தொடர்பாக தேர்தல் நேரத்தில் கூறிய வாக்குறுதிகள் குறைக்கப்பட்டதாகவும், தற்போது அறிவிக்கப்பட்ட தள்ளுபடி தொகைகள் விவசாயிகளை ஏமாற்றும் வகையில் உள்ளதாகவும் இபிஎஸ் விமர்சித்தார். குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படாததையும் சுட்டிக்காட்டி, கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நீரைப் பெற்றிருந்தால் தண்ணீர் திறந்திருக்கலாம் என கூறினார்.

கவர்னர் உரையை குறிப்பிட்ட அவர், அமைச்சரவை கூட்டத்தில் கூறப்பட்ட 436 திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்ற அறிவிப்புகள், மாதந்தோறும் ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட பல திட்டங்கள் உரையில் இடம்பெறவில்லை என்றார். அடிக்கடி மின்தடை ஏற்படுவதாகவும், தேவையான மின்சாரத்தை கொள்முதல் செய்து தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், பல துறைகளில் கடன் மற்றும் இழப்புகள் குறித்து அரசு கூறியுள்ள நிலையில், அவை தேர்தலுக்கு முன்பே தெரிந்திருந்தும் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டதாக அவர் கூறினார். கவர்னர் உரையில் புதிய அறிவிப்புகள் இல்லை என்றும், வாக்குறுதிகளை நிறைவேற்றாததற்கு காரணம் காட்டவே வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டதாக தாம் கருதுவதாகவும் இபிஎஸ் தெரிவித்தார்.