மும்பையில், ஐநாக்ஸ் நிறுவன நிதித்துறையில் பணியாற்றும் அதிகாரி ஒருவர், வாட்ஸ்அப்பில் இயக்குநர் என கூறி வந்த நபரின் உத்தரவுகளை நம்பி ரூ.10.40 கோடி வரை அனுப்பி ஏமாற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புகாரின் படி, 31 ஆண்டுகளாக நிதித்துறையில் பணியாற்றி வரும் அந்த அதிகாரிக்கு, புதிய எண்ணில் இருந்து வாட்ஸ்அப் குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில், “நான் சித்தார்த் ஜெயின், நிறுவனத்தின் இயக்குநர். அவசர மீட்டிங்கிற்கு செல்கிறேன்; அழைக்க வேண்டாம். நான் அனுப்பும் வங்கி கணக்கிற்கு ரூ.4.65 லட்சம் மாற்றுங்கள்” என கூறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த எண்ணின் முகப்பு படமாக இயக்குநரின் புகைப்படம் இருந்ததால், அது உண்மையான உத்தரவு என நம்பி அவர் பணம் அனுப்பியுள்ளார். தொடர்ந்து சில நாட்களில் 63 பரிவர்த்தனைகள் மூலம் பல்வேறு வங்கி கணக்குகளுக்கு மொத்தம் ரூ.10.40 கோடி வரை மாற்றியதாக கூறப்படுகிறது.
பின்னர், அனுப்பிய தொகைக்கான ரசீது விவரங்களை கேட்டு இயக்குநரின் அலுவலக மின்னஞ்சலுக்கு அவர் தொடர்பு கொண்ட போது, “நான் எந்த பணமும் அனுப்ப சொல்லவில்லை” என பதில் வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அவர் உடனடியாக மும்பை போலீசுக்கு தகவல் அளித்தார்.
விசாரணையில், டெல்லியில் உள்ள ஐ.டி.எப்.சி. வங்கி கிளை ஒன்றில் உள்ள இரண்டு கணக்குகளில் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் நடந்த தகவல் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர். கணக்கு வைத்திருந்தவர்கள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட போது, ரூ.20,000 கமிஷன் பெற்றுக்கொண்டு மோசடி நபர்களுக்கு வங்கி கணக்குகளை வழங்கி உதவியதாக கூறியுள்ளனர். தற்போது பணம் சென்ற பாதையை கண்டறியும் பணியில் சைபர் குற்றப்பிரிவு போலீசார் ஈடுபட்டுள்ளனர்.





