சாட் ஜி.பி.டி. உள்ளிட்ட எந்த செயற்கை நுண்ணறிவு கருவியும் தகுதியான விரிவுரையாளருக்கு இணையாக முடியாது; குறிப்பாக சட்டக் கல்வியில் வகுப்பறை கற்றலுக்கு மாற்றாக ஏ.ஐ.யை கருத முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

போதுமான வருகை இல்லாத காரணத்தால் செமஸ்டர் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டதும், அந்த கல்வியாண்டை மீண்டும் படிக்க வேண்டும் என விதிக்கப்பட்டதும் தொடர்பான விதிகளை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று தனி நீதிபதி அளித்த உத்தரவுக்கு எதிராக, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் மற்றும் அரசு சட்டக் கல்லூரி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீடுகளை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம், என். செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, கடும் போட்டிக்கிடையில் மாணவர்கள் விரும்பும் கல்லூரிகளில் இடம் பெறுவதால், அந்த வாய்ப்பின் மதிப்பை உணர வேண்டும் என்று குறிப்பிட்டது.

சட்டக் கல்வியில் சிறந்த வழக்கறிஞர்களாக உருவாக வகுப்பறை பாடங்கள் முக்கியம் என்றும், ஆன்லைன் வகுப்புகள் நேரடி கற்றல் முறைக்கு மாற்றாக முடியாது என்றும் அமர்வு தெரிவித்தது. மேலும், ஏ.ஐ. மனித நுண்ணறிவுக்கு நெருக்கமாக வரக்கூடும் என்றாலும், நேர்மை, ஒழுக்கம், நெறிமுறை போன்றவற்றை கற்றுத் தர முடியாது; அவை வகுப்பறையிலேயே கற்றுக்கொள்ள முடியும் என கூறியது.

தற்போதைய விதிகள் தெளிவாக உள்ள நிலையில் மறுஆய்வு செய்ய வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்வதாக அமர்வு உத்தரவிட்டது.