அமெரிக்காவின் ஹூஸ்டனில் நடந்த உலகக் கோப்பை கால்பந்து ‘கே’ பிரிவு லீக் போட்டியில் போர்ச்சுகல்–காங்கோ அணிகள் 1-1 என சமனில் முடித்தன.
இந்தப் போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ 2006 முதல் 2026 வரை தொடர்ந்து ஆறாவது உலகக் கோப்பையில் விளையாடி, அந்த சாதனையை எட்டிய இரண்டாவது வீரராக பதிவு செய்தார்.
ஆட்டத்தின் 6வது நிமிடத்தில் பெத்ரோ நேடோ உயர்த்திய பந்தை ஜோயாவோ நெவேஸ் தலையால் முட்டி கோலாக்கி போர்ச்சுகலுக்கு முன்னிலை கொடுத்தார். முதல் பாதி ஸ்டாப்பேஜ் நேரத்தில் (45+2) கிடைத்த கார்னர் வாய்ப்பில் மசுவாகு உயர்த்திய பந்தை விஸ்ஸா தலையால் கோலாக்கினார். இது உலகக் கோப்பை வரலாற்றில் காங்கோ அணிக்கான முதல் கோலாகும்.
இரண்டாம் பாதியில் 55வது நிமிடத்தில் ஜோவா கான்செலோ அடித்த கோல் ஆப்சைடு என நிராகரிக்கப்பட்டது. இறுதி வரை இரு அணிகளும் கூடுதல் கோல் பெற முடியாததால் போட்டி 1-1 என முடிந்தது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது; காங்கோ அணிக்கு இது உலகக் கோப்பை வரலாற்றில் கிடைத்த முதல் புள்ளியாகும்.





