புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாகக் கூறி, ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மீது பா.ஜ.க. ராஜ்யசபா உறுப்பினர்கள் ஆறு பேர் உரிமை மீறல் நோட்டீஸ் அளித்துள்ளனர்.
கார்கேவின் கருத்துகள் சபையின் மற்றும் அதன் உறுப்பினர்களின் மாண்பை குறைத்ததாக அவர்கள் குற்றம்சாட்டினர். இந்த நோட்டீஸை பா.ஜ.க. ராஜ்யசபா எம்.பி.க்கள் பிரிஜ் லால், மித்லேஷ் குமார், சுமித்ரா பால்மிக், சிவேஷ் குமார், சிக்கந்தர் குமார், நாகேந்திர ரெட்டி ஆகியோர் தாக்கல் செய்தனர்.
ராஜ்யசபா விதி 188ன் கீழ் தாக்கல் செய்யப்பட்ட இந்த நோட்டீஸை, சபைத்தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் விசாரணைக்காக உரிமை மீறல் குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
ராஜ்யசபா துணைத்தலைவர் ஹரிவன்ஷ் தலைமையிலான உரிமை மீறல் குழு, கார்கேவின் கருத்துகள் பாராளுமன்ற விதிகளை மீறியதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும் என, ராஜ்யசபா செயலர் பி.சி. மோடி வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





