மும்பை: உத்தவ் பாலாசாகேப் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியின் ராஜ்யசபா எம்.பி. சஞ்சய் ராவத், தங்கள் கட்சியின் எம்.பி.க்களை அணி மாற்ற வைக்க பணம் காட்டி முயற்சி நடப்பதாக குற்றம்சாட்டினார். ரூ.50 கோடி பேரம் பேசப்பட்டதாகவும், அதில் முன்பணமாக ரூ.15 கோடி வழங்கப்பட்டதாகவும் தகவல் கிடைத்ததாக அவர் கூறினார்.
மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பா.ஜ.க.–சிவசேனா–தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. உத்தவ் தாக்கரேயின் கட்சி மாநிலத்தில் முக்கிய எதிர்க்கட்சிகளில் ஒன்றாக இருந்து, 20 எம்.எல்.ஏ.க்களும் 9 லோக்சபா எம்.பி.க்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக, ‘ஆப்பரேஷன் டைகர்’ என்ற பெயரில் உத்தவ் சேனா எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களை துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா தங்கள் பக்கம் இழுக்க முயல்கிறது என்ற தகவல்கள் பரவி, அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தவ் தாக்கரே தலைமையில் நடந்த சமீபத்திய ஆலோசனைக் கூட்டத்தில் 9 எம்.பி.க்களில் 6 பேர் பங்கேற்கவில்லை என்றும், 16 எம்.எல்.ஏ.க்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் டில்லியில் செய்தியாளர்களை சந்தித்த ராவத், பணம் தருவதாக உத்தரவாதம் அளித்த பின்னர் நான்டெட், புனே உள்ளிட்ட இடங்களில் இருந்து ரகசிய விமானம் மூலம் சில எம்.பி.க்கள் சென்றதாகவும் குற்றம்சாட்டினார். மேலும் தாராசிவ் எம்.பி. ஓம்பிரகாஷ் ராஜே நிம்பால்கரை அவரது தந்தையின் கொலை வழக்கை காட்டி மிரட்டி அணி மாற வற்புறுத்தியதாகவும் கூறினார்.
அணி மாற்ற நினைப்பவர்கள் முதலில் எம்.பி. பதவியை ராஜினாமா செய்து, மீண்டும் தேர்தலில் நின்று மக்களின் ஆதரவை பெற வேண்டும் என ராவத் வலியுறுத்தினார். 2022 போல மீண்டும் பிளவு ஏற்பட்டால் மக்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் சும்மா இருக்க மாட்டார்கள் என்றும், கட்சி விவகாரங்கள் தொடர்பாக லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு முறைப்படி கடிதம் அனுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.





