தமிழக சட்டசபையில் பேசும் போது மக்கள் பிரச்னைகளுக்கு முன்னுரிமை அளித்து, சரியான வாதங்களை முன்வைக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கட்சியின் எம்.எல்.ஏ.க்களுக்கு அறிவுரை வழங்கினார்.
கவர்னர் உரையுடன் இன்று தொடங்கும் சட்டசபை கூட்டத்தொடரில் கட்சி எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதைக் குறித்து ஆலோசிக்க, சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்து ஸ்டாலின் பேசினார்.
முக்கியமான, வலுவான எதிர்க்கட்சியாக தி.மு.க. செயல்பட வேண்டும் என்றும், சட்டசபையில் கேள்விகள் எழுப்பி வலுவான காரணங்களுடன் கருத்துகளை முன்வைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். மேலும் கூட்டத்தொடரில் நூறு சதவீதம் பங்கேற்பு இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
தொகுதி மக்களை தொடர்ந்து சந்திக்க வேண்டும் என்றும், ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உதவிக்கு தி.மு.க. ஓடி வரும் என்ற நம்பிக்கை மக்களிடம் உருவாகும் வகையில் செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டதாக கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.





