மதுரை: தமிழ் திரைப்படத் துறையில் படப்பிடிப்புகளின்போது விபத்துகள் அதிகரித்து வருவதாக கூறப்படும் நிலையில், துணை நடிகர்கள், ஸ்டன்ட் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களின் பாதுகாப்பு குறித்து கவலை அதிகரித்துள்ளது.

திரைப்பட கலைஞர்கள் குறிப்பிட்ட சமீபத்திய சம்பவங்களில், நடிகர்-இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடிக்கும் கில்லர் படப்பிடிப்பில் சிலிண்டர் வெடித்து தொழிலாளி ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு முன் 2020ல் இயக்குநர் ஷங்கரின் இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் சரிந்து விழுந்ததில் மூவர் உயிரிழந்தனர். 2022ல் வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படப்பிடிப்பில் ரயில் காட்சி படமாக்கும்போது சுமார் 15 அடி உயரத்திலிருந்து விழுந்த ஸ்டன்ட் கலைஞர் சுரேஷ் உயிரிழந்தார்.

மேலும் 2023ல் அறம் பட இயக்குநர் கோபி நயினார் இயக்கிய அகரம் காலனி படப்பிடிப்பில் லைட்மேன் சண்முகம் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாகவும், கடந்தாண்டு பா.ரஞ்சித் இயக்கிய வேட்டுவம் படப்பிடிப்பில் கார் ஜம்ப் காட்சியில் தவறிவிழுந்த ஸ்டன்ட் கலைஞர் மோகன்ராஜ் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இத்தகைய சம்பவங்கள், படப்பிடிப்பு தளங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஒரே மாதிரியாக நடைமுறையில் இல்லை என்பதை காட்டுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

துணை நடிகர்கள் கூறுகையில், பல படப்பிடிப்பு தளங்களில் முதலுதவி போன்ற அடிப்படை வசதிகளே இல்லாத நிலை இருப்பதாகவும், உயரத்தில் கட்டப்பட்ட லைட்டுகள் மற்றும் அதிக மின்திறன் கொண்ட விளக்குகளுக்கு அருகில் பணியாற்ற வேண்டிய சூழல் இருப்பதாகவும் தெரிவித்தனர். பெரிய விபத்துகள் நடந்த பிறகே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் நிலை காணப்படுவதாகவும், தினக்கூலி அடிப்படையில் பணிபுரிவதால் மருத்துவச் செலவும் வருமான இழப்பும் தங்கள்மீதே விழுவதாகவும் கூறினர்.

ஹாலிவுட்டில் ஸ்டன்ட் காட்சிகளுக்கு பல நாட்கள் ஒத்திகை நடத்தப்படுவதுடன், அவசர மருத்துவக் குழு தயார் நிலையில் இருக்கும்; பாதுகாப்பு தரநிலைகள் பூர்த்தி ஆகாவிட்டால் படமாக்க முடியாது என்றும் அவர்கள் ஒப்பிட்டனர். இந்தியாவில் ஸ்டன்ட் கலைஞர்களுக்கான தனிப்பட்ட சட்டம் இல்லை; பாதுகாப்பு மற்றும் இழப்பீடு விவகாரங்கள் பெரும்பாலும் சங்கங்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் உடன்பாடுகளின் அடிப்படையில் தீர்க்கப்படுவதாகவும், செலவைக் குறைக்க சில நேரங்களில் பாதுகாப்பு உபகரணங்கள் குறைக்கப்படுவதாகவும் தெரிவித்தனர். திரைப்பட பின்னணி கொண்ட முதல்வர் விஜய், கலைஞர்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தரும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என திரைப்பட கலைஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.