சென்னை: அடுக்குமாடி கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி வழங்கும் நடைமுறையில் முறைகேடுகள் ஏற்படாத வகையில், தொடர்புடைய அதிகாரிகளை கண்காணிக்கும் நடவடிக்கைகளை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை முன்னெடுத்து வருகிறது.
சென்னை பெருநகர் பகுதியில் பலமாடி கட்டடங்களுக்கு அனுமதி வழங்கும் அதிகாரம் முன்பு அரசிடம் இருந்ததாகவும், சி.எம்.டி.ஏ.வில் இறுதி செய்யப்படும் விண்ணப்பக் கோப்புகள் துறைக்கு அனுப்பப்பட்டு, ஒவ்வொரு கோப்பின் விவரமும் அமைச்சருக்கு தெரிவிக்கப்பட்ட பின் அனுமதி வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சிக்காலத்தில், இவ்வகை ஒப்புதலுக்காக விண்ணப்பதாரர்களிடமிருந்து சதுரடி அடிப்படையில் ‘கட்சி நிதி’ என்ற பெயரில் பணம் வசூலிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, இவ்வசூலை நிறுத்த அரசு உத்தரவிட்டது.
அதன் தொடர்ச்சியாக, அடுக்குமாடி திட்ட கோப்புகளை அமைச்சரிடம் அனுப்பாமல் சி.எம்.டி.ஏ. நேரடியாக ஒப்புதல் வழங்கும் வகையில் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், ‘கட்சி நிதி’ நிறுத்தப்பட்டாலும், கோப்புகள் ஆய்வு உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து அதிகாரிகள் மட்டத்தில் தனியாக வசூல் நடப்பதாகவும் புகார்கள் வந்துள்ளன.
இதைக் கட்டுப்படுத்த, சிறப்பு கண்காணிப்பு உள்ளிட்ட அனைத்து வாய்ப்புகளும் பரிசீலிக்கப்படுவதாக ஒரு உயரதிகாரி கூறினார். பொதுமக்களுக்கு லஞ்சமின்றி கட்டட அனுமதி கிடைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.





