தமிழகத்தின் பல மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வெளியிட்ட அறிக்கையில், மாநிலத்தின் சில இடங்களில் மழை பெய்துள்ளதாகவும், அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் அரட்டவாடி பகுதியில் 12.52 செ.மீ மழை பதிவானதாகவும் கூறப்பட்டுள்ளது. கிழக்கு விதர்பாவிலிருந்து தெலுங்கானா, ஆந்திரா வழியாக தமிழக பகுதிகள் வரை சுமார் 0.9 கி.மீ உயரத்தில் காற்றழுத்தத் தாழ்வு பாதை நிலவுவதும், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரள பகுதிகளின் மேல் சுமார் 3.1 கி.மீ உயரத்தில் வளிமண்டல சுழற்சி நிலவுவதும் இதற்குக் காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று (ஜூன் 18) நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, ஈரோடு, நாமக்கல், திருச்சி, கரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மணிக்கு 40–50 கி.மீ வேகத்தில் காற்றுடன் கனமழை பெய்யக்கூடும்.

நாளை (ஜூன் 19) நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்; நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் ஜூன் 18, 19 தேதிகளில் மணிக்கு 40–50 கி.மீ வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.