உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அணியின் டில்லி பார்லி குழுக் கூட்டத்தில், கட்சியின் லோக்சபா கொறடா அரவிந்த் சாவந்த் கட்டாயமாக பங்கேற்க உத்தரவிட்டிருந்தும், ஆறு எம்பிக்கள் வரவில்லை. இதனால் கட்சிக்குள் மீண்டும் பிளவு ஏற்படும் என்ற பேச்சு தீவிரமடைந்துள்ளது.

கடந்த சில நாட்களாக, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா தரப்பு “ஆப்பரேஷன் டைகர்” என்ற பெயரில் உத்தவ் அணியின் எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி, மஹாராஷ்டிர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன் உத்தவ் தாக்கரே தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திலும் ஒன்பது எம்பிக்களில் ஆறு பேர் பங்கேற்கவில்லை; மேலும் 16 எம்எல்ஏக்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என கூறப்பட்டது. பணம் தருவதாக கூறி ரகசிய இடங்களில் இருந்து விமானம் மூலம் டில்லிக்கு அழைத்து சென்றதாக சஞ்சய் ராவத் குற்றம்சாட்டினார்.

இன்றைய பார்லி கூட்டத்தை புறக்கணித்தால் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அரவிந்த் சாவந்த் எச்சரித்திருந்தார். இருப்பினும் கூட்டத்தில் அரவிந்த் சாவந்த், ராஜூபாய் வஜே, அனில் தேசாய் ஆகியோர் மட்டுமே பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து ராவத், கொறடா உத்தரவை மீறிய எம்பிக்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்படும் என்றும், தகுதி நீக்க நடவடிக்கைக்கான முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மஹாராஷ்டிராவில் பாஜ “மோசமான அரசியல்” செய்கிறது என்றும், ஆறு எம்பிக்கள் சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்ததாக வெளியான தகவலுக்கு ஆதாரம் காட்ட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதனிடையே, புறக்கணித்த எம்பிக்கள் சபாநாயகரை சந்தித்த போது, உத்தவ் தரப்பு காங்கிரஸுடன் இணைவதற்கான திட்டத்தில் இருப்பதாகவும், அதனால் கட்சியிலிருந்து விலக எண்ணியதாகவும் கூறி, லோக்சபாவில் தனி இருக்கை ஒதுக்க வேண்டும் என தெரிவித்ததாக தகவல் வெளியானது. தேர்தல் காலத்தில் உத்தவ் தாக்கரே உதவி செய்யவில்லை; தொகுதிக்கு வருமாறு கேட்ட அழைப்புகளையும் தொடர்ந்து புறக்கணித்தார் என்றும் அவர்கள் குற்றம்சாட்டியதாக கூறப்படுகிறது.