அமெரிக்காவுடன் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகி விட்டதாகவும், இனி அதை நடைமுறைப்படுத்திப் பார்க்க வேண்டிய கட்டம் வந்துள்ளதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா–இஸ்ரேல் இடையிலான போர் 110 நாட்களைக் கடந்த நிலையில், 19-ஆம் தேதி அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்பே அறிவித்திருந்தார். ஆனால் அதற்கு முன்பே டிஜிட்டல் வடிவில் அமெரிக்கா மற்றும் ஈரான் கையெழுத்திட்டதாக தகவல்கள் வெளியாகின.
பிரான்ஸில் நடந்த ஜி7 மாநாட்டில் பங்கேற்றிருந்த அதிபர் டிரம்ப், ஈரானுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். ஜி7 மாநாட்டுக்குப் பிறகு வெர்சாய்ஸ் அரண்மனையில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுடன் நடைபெற்ற இரவு விருந்தின்போது கையெழுத்து நடந்ததாக ‘ஆக்ஸியோஸ்’ செய்தி வெளியிட்டது.
இதனைத் தொடர்ந்து, ஒப்பந்தத்தில் தாங்களும் கையெழுத்திட்டுள்ளதாக ஈரானும் உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும், இறுதி ஒப்பந்தத்தின் விதிகளைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்த இருநாடுகளுக்கும் 60 நாட்கள் அவகாசம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
ஈரான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய், இரு நாட்டு அதிபர்களின் கையெழுத்துகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இப்போது அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் செயல்பாட்டை சோதித்துப் பார்க்க வேண்டிய நேரம் வந்துள்ளதாகவும் அந்நாட்டு அரசு செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.





