முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) கூட்டணி அரசின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று சென்னையில் தொடங்குகிறது. தொடக்கமாக கவர்னர் உரை இடம்பெற உள்ளது.
சமீபத்திய சட்டசபை தேர்தலில் த.வெ.க. 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. மே 10-ம் தேதி விஜய் முதல்வராக பொறுப்பேற்றார்; மே 11-ம் தேதி எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றனர்; மே 12-ம் தேதி சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்வு நடைபெற்றது. சபாநாயகராக பிரபாகர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மே 13-ம் தேதி அரசு பெரும்பான்மையை நிரூபித்தபோது, எதிர்பாராத வகையில் அ.தி.மு.க.வின் 25 எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க. அரசுக்கு ஆதரவாக ஓட்டளித்தனர்.
அதன் பின்னர் தேதி குறிப்பிடாமல் சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது. அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஐந்து எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். மேலும், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை முதல்வர் விஜய் ராஜினாமா செய்ததால், தேர்தல் முடிந்த ஒரு மாதத்துக்குள் ஆறு தொகுதிகள் காலியாகியுள்ளன.
த.வெ.க. அமைச்சரவையில் காங்கிரஸ், வி.சி.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன; இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவு அளிக்கின்றன. 34 அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவையுடன், இன்று காலை 10 மணிக்கு கவர்னர் ராஜேந்திர அர்லேக்கர் சட்டசபைக்கு வந்து உரையாற்ற உள்ளார். இதற்கான கவர்னர் உரை அரசுத் தரப்பில் தயாரிக்கப்பட்டு லோக் பவனுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களில் பலர் புதியவர்கள் என்பதால், சட்டசபை செயலகம் மூலம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இரு நாள் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டுள்ளது. சபை நடைமுறைகள், எதிர்க்கட்சியினர் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதம் உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் எழுப்ப வாய்ப்புள்ளதாகவும், அதற்கு அமைச்சர்கள் எப்படி பதிலளிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுவதாகவும் கூறப்படுகிறது. சட்டசபை நிகழ்வுகள் முழுவதும் நேரடி ஒளிபரப்பு இல்லை; கவர்னர் உரை, கேள்வி நேரம், முதல்வர் மற்றும் அமைச்சர்களின் உரைகள் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள் மட்டும் நேரடியாக ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.




