அனைத்து அரசு பேருந்துகளுக்கும் மகளிர் இலவச பயண திட்டத்தை விரிவாக்குவது குறித்து முதல்வர் விஜய் நேற்று சென்னையில் தலைமைச் செயலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடத்தினார்.
தமிழக போக்குவரத்து துறையின் செயல்பாடுகள் மற்றும் அதன் கீழ் இயங்கும் எட்டு அரசு போக்குவரத்துக் கழகங்களின் நிலவரம் குறித்து அதிகாரிகள் விளக்கமளித்தனர். இக்கழகங்கள் மூலம் 21,527 பேருந்துகள் இயக்கப்படுகின்றன; தினசரி பயணிகள் எண்ணிக்கை 2.05 கோடி எனவும், இதில் பெண்கள் 64% எனவும் தெரிவிக்கப்பட்டது. பெண்கள் இலவசமாக பயணம் செய்வதற்கான விவரங்களும் முதல்வரிடம் எடுத்துரைக்கப்பட்டன.
மேலும், அரசு போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்தும் செயல் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. நகரப் பேருந்துகளில் மட்டும் நடைமுறையில் உள்ள மகளிர் இலவச பயணத்தை அனைத்து பேருந்துகளுக்கும் விரிவுபடுத்துவது, மின்சார பேருந்துகளை அதிகரிப்பது, போக்குவரத்து ஊழியர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது ஆகியவை விவாதப் பொருளாக இருந்தன.
போக்குவரத்து துறையின் சேவைத் தரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் தொடர்ந்து கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது.





