இந்தியா எரிசக்திக்காக இறக்குமதியை நம்பியிருப்பதை குறைக்க வேண்டும் என்றும், தற்போதைய சார்பு உலகளாவிய சூழ்நிலைகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
மும்பையில் நடைபெற்ற ரிலையன்ஸ் நிறுவனக் கூட்டத்தில் பேசிய அவர், இந்தியாவின் எரிசக்தி தேவையில் சுமார் 70 சதவீதம் இறக்குமதியை சார்ந்துள்ளதாக குறிப்பிட்டார். இந்த நிலை சர்வதேச இடையூறுகள் நேர்ந்தால் சிக்கலை உருவாக்கும் என்றும், நீண்ட காலத்திற்கு இது நிலைத்திருக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
இந்தியாவின் எதிர்காலம் எரிசக்தி பாதுகாப்பின்மையால் முடக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வது ரிலையன்ஸின் பொறுப்பு என அம்பானி தெரிவித்தார். இந்தியாவின் எரிசக்தி தன்னிறைவு இலக்கை ஆதரிக்கும் வகையில் ஒருங்கிணைந்த எரிசக்தி உத்தியை நிறுவனம் செயல்படுத்தி வருவதாகவும் கூறினார்.
அந்த உத்தியில் சூரிய ஆற்றல், காற்றாலை மின்சாரம், ஹைட்ரஜன் எரிசக்தி, நிலக்கரி ஆகியவை இடம்பெறுகின்றன. மேலும் நிலத்தடி நிலக்கரி வாயுவாக்கம், உயிரி ஆற்றல், புதிய ஆற்றல், எண்ணெயில் இருந்து ரசாயனம் உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய ஐந்து ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பிரிவுகளை நிறுவனம் உருவாக்கி வருவதாக அவர் தெரிவித்தார்.
பசுமை ஆற்றல் சூழலமைப்பு, நிறுவனத்தின் பாரம்பரிய ஆற்றல் வணிகத்தை மாற்றுவதோடு, எதிர்கால வளர்ச்சிக்கான குறிப்பிடத்தக்க வாய்ப்புகளையும் உருவாக்கும் என அம்பானி கூறினார். புதிய ஆற்றல் முயற்சிகளையும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த செயல்பாடுகளையும் இணைப்பது, உலகளவில் எளிதில் பின்பற்ற முடியாத வணிக மாதிரியை உருவாக்க உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.





