சென்னை: தமிழக அரசின் நிதிநிலை குறித்து வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கையில், பெரிதாக ஆச்சரியப்பட வைக்கும் அளவுக்கு புதிய தகவல்கள் இல்லை என்று ‘வீ தி லீடர்ஸ்’ நிறுவனர் அண்ணாமலை தெரிவித்தார். அந்த ஆவணத்தைப் படித்ததாகவும், கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட நிதி நிர்வாகச் சீர்கேடுகளை வெளிச்சம் போடும் பதிவாகவே அது இருப்பதாகவும் அவர் கூறினார்.

அறிக்கையில் தமிழகத்தின் முக்கிய நிதிக் குறியீடுகள் பிற தொழில்மயமான மாநிலங்களுடன் ஒப்பிடப்பட்டு தற்போதைய நிலை விளக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். ஆனால், இது புதிய வெளிப்பாடுகளை விட, கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏற்பட்ட சரிவுகளைச் சுட்டிக்காட்டுவதாகவே இருப்பதாகவும் தெரிவித்தார்.

வெள்ளை அறிக்கையில் இடம்பெற்ற தகவல்களை மேற்கோள் காட்டி, தமிழகத்தின் மொத்தக் கடன் நிலுவை ரூ.10 லட்சம் கோடியை எட்டியுள்ளதாகவும், சராசரியாக ஒவ்வொரு குடிமகன் பெயரிலும் ரூ.1,28,934 கடன் சுமை இருப்பதாகவும் அவர் கூறினார். மேலும், மாநிலத்தின் மொத்த வருவாயில் 22.8% கடனுக்கான வட்டி செலுத்துவதற்கே செலவாகிறது என்ற தகவலையும் சுட்டினார்.

மேலும், மாநிலத்தின் சொந்த வரி வருவாய் (SoTR) மற்றும் GSDP விகிதம் 2021-22ல் 5.93% இருந்து 2025-26ல் 5.45% ஆக குறைந்துள்ளதாகவும் கூறினார். மின்சாரம், போக்குவரத்து, நுகர்பொருள் விநியோகம் தொடர்பான முக்கிய பொதுத்துறை நிறுவனங்களின் மொத்தக் கடன் ரூ.3.18 லட்சம் கோடி எனவும், நில மதிப்பை குறைத்து பதிவு செய்வது போன்ற முறைகேடுகள் காரணமாக பத்திரப் பதிவுத்துறையில் வருவாய் இழப்பு மற்றும் அமைப்பு சார்ந்த ஊழல் குறித்து அறிக்கை குறிப்பிடுவதாகவும் அவர் தெரிவித்தார்.

2031 முதல் வேலை செய்யும் வயதுடைய மக்கள் தொகை குறையத் தொடங்கும் சூழலில், வருவாய் அடித்தளத்தை வலுப்படுத்தவும் நிதிநிலையை சீர்செய்யவும் குறுகிய காலமே இருப்பதாக அண்ணாமலை எச்சரித்தார். வெள்ளை அறிக்கையை காரணம் காட்டி செயல்படாமல் இருக்கக் கூடாது என்றும், உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் கூறிய அவர், பொருளாதாரம், கல்வி மட்டுமின்றி தொழில், வர்த்தகம், நிர்வாகம், தொழில்நுட்பம், சமூக மேம்பாடு உள்ளிட்ட துறைகளின் வல்லுநர்களை இணைத்த “செயல்திறன் மிக்க” ஆலோசனைக் குழுவை அமைக்க வேண்டும் என அரசை கேட்டுக் கொண்டார்.