சென்னையில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டசபை கூட்டத்தொடர், கவர்னர் ராஜேந்திர அர்லேக்கர் உரையுடன் தொடங்கியது. நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் ஆரம்பித்து, அதனைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
கவர்னர் காலை 9.50 மணியளவில் சட்டசபைக்கு வந்தார். முதல்வர் விஜய், சபாநாயகர் பிரபாகர், சட்டசபை செயலர் சாந்தி ஆகியோர் சால்வை மற்றும் பூங்கொத்து வழங்கி வரவேற்றனர். போலீஸ் அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.
காலை 10.02 மணிக்கு கவர்னர் உரையை வாசிக்கத் தொடங்கி, 10.39 மணிக்கு நிறைவு செய்தார். தமிழக அரசு தயாரித்து அளித்த உரை எந்த இடையூறும், மாற்றமும் இன்றி முழுமையாக வாசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
கவர்னர் ஆங்கிலத்தில் வாசித்த உரையைத் தொடர்ந்து, சபாநாயகர் பிரபாகர் அதன் தமிழாக்கத்தை வாசித்தார். தமிழாக்கம் முடிந்ததும் மீண்டும் தேசிய கீதம் இசைக்கப்பட்டு, கவர்னர் சபையிலிருந்து புறப்பட்டார். அவர் முதலில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிக்கு வணக்கம் தெரிவித்த பின்னர், முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கும் வணக்கம் தெரிவித்தார்.
சட்டசபை வரலாற்றில் முதல்முறையாக தேசிய கீதம் இருமுறை இசைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கேள்வி எழுந்தபோது, “இதில் தவறு இல்லை; தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும் என்ற அனைவரது எண்ணம் நிறைவேறியுள்ளது; இந்த நடைமுறை தொடர வேண்டும்” என சபாநாயகர் தெரிவித்தார். மேலும், நேற்று ‘வந்தே மாதரம்’ பாடப்படவில்லை; முன்னாள் கவர்னர் ரவி இதை முன்பு வலியுறுத்தியதால் சர்ச்சை ஏற்பட்டிருந்த நிலையில், இம்முறை எந்த குழப்பமும் இன்றி நிகழ்ச்சி முடிந்தது.





