டெலிகிராம் தகவல் பரிமாற்ற செயலி தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும், பயங்கரவாதம், இணைய குற்றங்கள், நிதி மோசடி, போதைப் பொருள் கடத்தல், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சுரண்டல் உள்ளடக்கம் போன்ற சட்டவிரோத செயல்களில் அது பயன்படுத்தப்படுவதாகவும் மத்திய அரசு டில்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம், ஜூன் 22 வரை டெலிகிராம் செயலியை முடக்க மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து டெலிகிராம் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கில் முன்வைக்கப்பட்டது. ஜூன் 21-ல் நடைபெற உள்ள நீட் மறுதேர்வுக்கு முன், வினாத்தாள் விற்பனை டெலிகிராமில் நடக்கிறது என்ற வதந்தி பரவியதைத் தொடர்ந்து இந்த முடக்கம் அறிவிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

விசாரணையில் நீதிபதி தேஜஸ் காரியா, குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே தேர்வு எழுதும் நிலையில், சுமார் 15 கோடி பயனாளர்களின் உரிமைகளை எவ்வாறு கட்டுப்படுத்த முடியும் என கேள்வி எழுப்பினார். மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல், அரசின் நிலைப்பாட்டை விளக்கும் விரிவான அறிக்கையை தாக்கல் செய்தார்.

அறிக்கையில், குற்றவாளிகள் பிடிபடாமல் தப்பிக்க உதவும் “புதிய டார்க் வெப்” போன்று டெலிகிராம் செயல்படுகிறது என்றும், சேனல்கள் மற்றும் குழுக்கள் வழியாக குழந்தைகளை சித்திரவதை செய்யும் ஆபாசப் படங்கள் பெருமளவில் பகிரப்படுகின்றன என்றும் குற்றம்சாட்டப்பட்டது. மேலும், ஆயிரக்கணக்கான சேனல்கள் மூலம் புதிய திரைப்படங்கள் மற்றும் பதிப்புரிமை உள்ளடக்கம் இலவசமாக பகிரப்படுவதால் தயாரிப்பு நிறுவனங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது; இது அறிவுசார் சொத்துரிமை சட்ட மீறல் என்றும் குறிப்பிடப்பட்டது.

மேலும், சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை டெலிகிராம் முழுமையாக பின்பற்றவில்லை; குற்றவாளிகள் தொடர்பான தகவல்களை கோரும்போது போதுமான ஒத்துழைப்பு தரவில்லை என்றும் மத்திய அரசு தெரிவித்தது. இந்த அறிக்கையை பதிவு செய்த டில்லி உயர் நீதிமன்றம், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது.