சென்னை–பெங்களூரு மற்றும் சென்னை–ஹைதராபாத் உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் அதிவேக ரயில் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் புதன்கிழமை தெரிவித்தார். மும்பை–ஆமதாபாத் புல்லட் ரயில் திட்டம் அடுத்த ஆண்டு பொதுப் பயன்பாட்டிற்கு வரும் என்றும் அவர் கூறினார்.
சென்னை பல்லாவரம் அண்ணா கன்டோன்மென்ட் உயர்நிலைப் பள்ளியில் 3டி அனிமேஷன் மற்றும் வி.எப்.எக்ஸ். தொடர்பான நீண்டகால திறன் மேம்பாட்டு பயிற்சி திட்ட தொடக்க விழாவில் பங்கேற்று அவர் உரையாற்றினார்.
கதை சொல்லும் முறை காலப்போக்கில் மாறியுள்ளதாக கூறிய அவர், முன்பு நீண்ட நேரம் நீளும் வடிவங்களில் இருந்த உள்ளடக்கம், இப்போது சில விநாடிகளில் கவனத்தை ஈர்க்க வேண்டிய சூழலுக்கு வந்துள்ளதாக தெரிவித்தார். இந்திய கதைகளுக்கு உலகளவில் நல்ல வரவேற்பு கிடைப்பதாகவும், தொழில்நுட்ப கலைஞர்கள் அதிகம் உள்ள நாடாக இந்தியா விளங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சென்னை, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு போன்ற நகரங்களில் ஹாலிவுட் படங்களுக்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் தொழில்நுட்ப கலைஞர்கள் ஈடுபடுவதாக அவர் கூறினார். ஏ.வி.ஜி.சி. துறையில் உலகளவில் வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருவதாகவும், இதை ஊக்குவிக்கும் வகையில் மும்பையில் 77 நாடுகள் பங்கேற்ற ‘வேவ்ஸ்’ சர்வதேச மாநாடு நடத்தப்பட்டதாகவும், அது அடுத்தாண்டும் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
புதிய தேசிய கல்விக் கொள்கையின் கீழ் நாடு முழுவதும் 15,000 பள்ளிகள் மற்றும் 500 கல்லூரிகளில் ஏ.வி.ஜி.சி. பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார். டிஜிட்டல் பரிவர்த்தனைகள், ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் மற்றும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்திய இளைஞர்கள் சாதனை படைத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.





