நீட் மறுதேர்வு நடைமுறை முடியும் வரை டெலிகிராம் தகவல் பரிமாற்ற செயலியை தற்காலிகமாக முடக்கிய மத்திய அரசின் முடிவு சரியானது என டில்லி உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.

கடந்த மாதம் 3-ம் தேதி நடந்த இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, வரும் 21-ம் தேதி மறுதேர்வு நடைபெற உள்ளது. இதற்கிடையில், மறுதேர்வு வினாத்தாள் டெலிகிராமில் விற்பனை செய்யப்படுவதாக வதந்தி பரவியது.

இதன் அடிப்படையில், வரும் 22-ம் தேதி வரை டெலிகிராம் செயலியை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து டெலிகிராம் நிறுவனம் டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது; அரசு பதில் அளிக்க நீதிமன்றம் முன்பே உத்தரவிட்டிருந்தது.

விசாரணையில், டெலிகிராம் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும், பயங்கரவாதம், இணைய குற்றங்கள், நிதி மோசடி, போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களுக்கு அது துணை போகிறது என்றும் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்தது. வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நீட் தேர்வு முடியும் வரை விதிக்கப்பட்ட தற்காலிக தடை நியாயமானது என நீதிமன்றம் உத்தரவிட்டது.