கோவிட்-19 தொற்றுநோய் 2019 டிசம்பரில் சீனாவின் ஹுபெய் மாகாணம் வுஹான் நகரில் முதலில் கண்டறியப்பட்டது. இந்தியாவில் முதல் பாதிப்பு 2020 ஜனவரி 30-ஆம் தேதி கேரளாவில் பதிவானது; பின்னர் நாடு முழுவதும் பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், அமெரிக்க தேசிய உளவுத்துறை இயக்குநர் துளசி கபார்ட், தொற்றுநோயின் தோற்றம் மற்றும் வெளிநாடுகளில் அமெரிக்க நிதியுதவி பெறும் உயிரியல் ஆய்வகங்கள் குறித்து புதிய குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். சீனாவின் வூகானில் உள்ள ஒரு நிறுவனத்தில் அமெரிக்க நிதியுதவியுடன் நடந்த ஆராய்ச்சியே கொரோனா வைரஸ் பரவலுக்கு காரணம் என அவர் கூறினார்.

வைரஸ் பரவலும், அதனை மூடி மறைக்க முயன்றதும் தொடர்பாக முன்னாள் அதிபர் ஜோ பைடனின் ஆலோசகர் ஆண்டனி பாஸி மீது அவர் குற்றம் சாட்டினார். அந்த ஆய்வகங்களில் அபாயகரமான நோய்க்கிருமிகள் கையாளப்பட்டதாகவும், அதற்கான தகவல்கள் அமெரிக்க மக்களிடம் இருந்து திட்டமிட்டு மறைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், ஆராய்ச்சிகளை அம்பலப்படுத்த முயன்ற விஞ்ஞானிகள் அச்சுறுத்தப்பட்டதாகவும் கூறினார். டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் பொறுப்பேற்ற பிறகு, அந்த ஆய்வகங்களை விசாரிக்க தனது அலுவலகம் நடவடிக்கை எடுத்ததாக துளசி கபார்ட் தெரிவித்தார்.

துளசி கபார்ட் அமெரிக்க தேசிய உளவுத்துறையின் எட்டாவது இயக்குநர். 2013 முதல் 2021 வரை ஹவாய் மாநிலத்தைச் சேர்ந்த அமெரிக்க பிரதிநிதிகள் சபை உறுப்பினராக இருந்தார்; முன்னர் ஜனநாயகக் கட்சியில் இருந்த அவர் 2022-ல் சுயேச்சையாகி, 2024-ல் குடியரசுக் கட்சியில் இணைந்தார். அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்து என்ற பெருமையும் அவருக்கு உண்டு.